இறக்குவானை – மாதம்பை பகுதியிலுள்ள ஹோட்டல் அறைக்குள் மர்மமாக உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலம் இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் மாதம்பை பகுதியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றுக்கு சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
இதன்போது, குறித்த யுவதியை அறைக்குள் விட்டு, குறித்த இளைஞன் வெளியில் சென்று மீண்டும் ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளார்.
இவ்வாறு மீண்டும் இளைஞன் அறைக்கு வருகைத் தரும் போது, அறை உள்பக்கமாக மூடப்பட்டுள்ளது.
கதவை திறப்பதற்கு முயற்சித்த போது, அறையை திறக்க முடியாததை அடுத்து, குறித்த இளைஞன் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, ஹோட்டல் ஊழியர் ஒருவரின் உதவியுடன் யன்னல் வழியாக பார்த்த போது, யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், யன்னல் வழியாக உள்ளே சென்ற இளைஞன், யுவதியை மீட்டு கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும், யுவதி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த இறக்குவானையைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுவதி உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறியும் வகையிலான விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.