நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.