விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலவிடம் துருவித்துருவி கேள்வி கேட்ட நிலையில், அது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்திருந்தார்.
நேற்று யாழ். மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஊடகவியலாளர்கள் பிரபாகரன் தொடர்பாக மைத்ரிபால சிறிசேனவை நோக்கி தொடர்ச்சியான கேள்விக்கணைகளை தொடுத்திருந்தனர்.
இதன்போது, யுத்த இறுதிக் காலகட்டத்தின் போது நீங்கள் பாதுகாப்பு அமைச்சராக கடமை யாற்றி இருந்தீர்கள். எனவே பிரபாகரன் உள்ளாரா, இல்லையா என்பது தொடர்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அது தொடர்பாக உங்கள் கருத்து என்னவென கேள்வி எழுப்பியபோதே மைத்ரிபால சிறிசேன அது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனப் பதிலளித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அப்போது நான் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவே இருந்தேன். அதுவும் இரண்டு வாரங்கள் மாத்திரமே பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன்.
பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்பது நிலைமைகளை கையாண்ட தலைமைகளுக்கு மாத்திரமே தெரியும். அவை தொடர்பாக என்னுடன் அவர்கள் ஆலோசிக்கவில்லை என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.