இராணுவ பேருந்து மோதியதில் மூன்று வயது சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தாயாரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளராக பணியாற்றும் சிறுமியின் தாயார், சிறுமியுடன் ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
களுத்துறையில் இருந்து இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற இராணுவ பேருந்தே இவர்கள் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுமியையும் அவரது தாயையும் உடனடியாகச் செயற்பட்ட பிரதேசவாசிகள் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.