இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இங்கினியாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த இரண்டு மாணவிகளும் நெருங்கிய நண்பர்கள் என்றும், 16 வயதுடைய பி.ஜி.அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி என்ற மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
பவீஷா மேலதிக வகுப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கடந்த 15ம் திகதி அஷானியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அஷானியின் தந்தை கொழும்பில் பணிபுரிவதுடன், அவர் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுவயதில் அம்மா விட்டு சென்றதால் அவர் பாட்டி வீட்டில் வசித்து வருவதாகவும், கடந்த 15ம் தேதி காலை வீட்டுக்கு வந்த பவீஷாவுடன் மேலதிக அவர் வகுப்புக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இவ்வாறு சென்ற சிறுமிகள் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு இது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய நாள் மற்றும் மறுநாள் தமது நண்பர் ஒருவருக்கு போன் செய்து தாங்கள் கொழும்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட நண்பரையும் பொலிஸார் அழைத்து விசாரித்துள்ளனர்.
குறித்த மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் இதுவரையில் சரியான காரணம் வெளிவராத நிலையில் சகல பொலிஸ் நிலையங்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.