ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விவசாயம் செய்யப்படாத காணிகளில் கால்நடைகளுக்கான விசேட புல் வகையொன்றை வளர்ப்பதற்கு சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளது.
“அல்ஃபால்பா” எனப்படும் இந்த வகை புல், இலங்கையில் பயிரிடப்பட்டு சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
குறித்த சீன நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்பொருட்டு முதலில் இந்த புல் விதைகளை பரிசோதனைக்காக தேசிய தாவர பரிசோதனை சபைக்கு அனுப்ப வேண்டும் என விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புல் வகை ஆக்கிரமிப்பு தாவர இனமா என்பதையும், அந்த விதைகள் நாட்டின் சுற்றுச்சூழலுடன் இணக்கமாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்று சீன நிறுவனத்தின் தூதுக்குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனையின் பின்னர் இலங்கையில் புல் இனங்கள் பயிரிடப்படுமா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச அமரசிங்க தெரிவித்துள்ளார்.