இலங்கை தமது உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் திட்டங்களை இன்னும் நிறைவு செய்யவில்லை என்று பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் வங்கி மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக சேமசிங்க ட்வீட் செய்துள்ளார்.
ஒரு முடிவு இல்லாமல் முன்கூட்டியே கூறப்படும் ஊகங்கள் சந்தை நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் ஒரு பகுதியாக சர்வதேச கடன் வழங்குநர்களுடனான கடனையும் அதன் உள்ளூர் கடனையும் இலங்கை மறுசீரமைக்க வேண்டியுள்ளது.
இந்தநிலையில் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் ஈடுபடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது சாதகமான உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் என்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் பதில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.