இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத்திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை, இலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில் இலங்கை சனத்தொகையில் 17 சதவீதமானவர்கள் அதாவது 39 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மை பிரச்சினைக்கு ஆளாகியுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த வருடத்தின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடும் போது அந்த நிலைமை 40 சதவீதம் குறைவடைந்திருப்பதாகவும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்குபவர்களின் எண்ணிக்கையும் 66,000 இல் இருந்து 10,000 வரையில் குறைவடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனை, உணவு நுகர்வின் அதிகரிப்பாகவும் கருத முடியும் என்பதோடு, அறுவடைக் காலத்தில் விவசாய சமூகத்தினரின் குறைந்த உற்பத்தி செலவும் அதிக வருமானமும் இதற்கு காரணமாகும் என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.