வாகன இறக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வருடாந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வருமான இலக்குகளை அடைவதற்கு தடையாக இருப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன் ஆஜராகிய போதே இலங்கை சுங்க அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இலங்கை சுங்கத்துறையின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கூடியது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை சுங்கத்தின் வருமானமாக 1,226 பில்லியன் எதிர்பார்க்கப்படுகிறது இதேவேளை இவ்வாண்டு முதல் ஐந்து மாதங்களில் 330 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.
முதல் ஐந்து மாதங்களுக்கான புள்ளிவிபரங்களை பரிசீலிக்கும் போது இலக்கை அடைவதில் சுங்கம் சிரமங்களை எதிர்நோக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.