இலங்கை வந்துள்ள தாய்லாந்தின் யானை பாகர்கள் இருவர், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நோய்வாய்ப்பட்டுள்ள தாய்லாந்து யானையான சக் சுரினுக்கு, உணவளித்து நீராட்டியதன் மூலம் அதனுடன் பழக ஆரம்பித்துள்ளனர்.
பிரத்தியேகமாக கட்டப்பட்ட கூண்டில் குறித்த யானை, உள்ளே நுழையவும், வெளியேறவும், தங்கியிருப்பதற்கும், பயிற்சி அளிக்கும் செயற்பாடுகள், இந்த யானை பாகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்புக்களாகும்.
சுமார் இரண்டு வாரங்களில் இந்த பழக்கப்படுத்தலை நிறைவு செய்து, திட்டமிட்டபடி யானையை தாய்நாட்டுக்கு கொண்டு செல்லலாம் என அவர்கள் இருவரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தாய்லாந்து யானைப் பாகர்கள் இருவரும் பேசும் தாய் மொழிக்கு, குறித்த யானை பதிலளித்ததாகவும், அது, உணவுக்காக சைகை காட்டியதாகவும், தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரின் மூலோபாயக் குழுவின் ஆலோசகர் காஞ்சனா சில்பா-அர்ச்சா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
30 வயதான சக் சுரின் என்ற ஆண் யானை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.