கொழும்பு மாநகர சபையின் 2020/2021 ஆண்டுகளுக்கான கணக்காளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் (06) கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது.
இதன்போது, 2021 ஆம் ஆண்டின் மொத்த நிலுவை வருமானம் 5,835.6 மில்லியன் ரூபா எனவும், 2020 இல் 5,386.4 மில்லியன் ரூபா எனவும் 2019 இல் 4,481.5 மில்லியன் ரூபா எனவும் இதன்போது புலப்பட்டது.
இவற்றில் வரிகள், வாடகைகள் மற்றும் ஏனைய வரிகள் என்பன நிலுவையாகக் காணப்படுவதாக இதன்போது இனங்காணப்பட்டது.
அதற்கமைய, நிலுவை வரிகள் காணப்படும் சொத்துக்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், ஒரு சில சொத்துக்களின் உரிமையாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும், மாநகர சபையில் இது தொடர்பில் செயற்படவேண்டிய அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதும் இந்த நிலுவைகளை அறவிடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
சட்டரீதியற்ற நிர்மாணங்களுக்கும் வரி இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, 2023 ஜூலை 23 ஆம் திகதிக்குள் நிலுவைகளை அறவிடுவதற்கான திகதிகளுடன் கூடிய வேலைத்திட்டமொன்றை தயாரித்து முழுமையான அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறு குழு பரிந்துரைத்தது.
அத்துடன், வாகனத்தரிப்பிட கட்டணங்களை அறவிடுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட தனியார் நிறுவனங்களினால் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய மாதாந்த வாடகைக் கட்டணத்தை செலுத்தாமல் தொடர்ந்தும் கைவிடப்பட்டிருப்பதாகவும், 2021 டிசம்பர் 31 வரை 38 நிறுவனங்களிடமிருந்து அறவிடப்படவேண்டிய நிலுவைத் தொகை 265 மில்லியன் ரூபாய் எனவும் இதன்போது புலப்பட்டது.