தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பேருந்துகளில் ஏறி பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிய ஒருவர் 5200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பத்து இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான இருபது கைத்தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பேருந்துகளில் கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போவது தொடர்பில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய கிடைக்கப்பெற்ற சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குறித்த நபரின் அடையாளங்களை கொண்ட சந்தேக நபர் பிலியந்தலை மிரிஸ்வத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
வாந்துவ, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திருடச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரால் திருடப்பட்ட பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
