தன்னை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ். துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனு இன்று அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடையீட்டு மனுவை சமர்ப்பித்த எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்டோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன காரணிகளை முன்வைக்க அவகாசம் கோரியிருந்தார்.
அதன்போது மனுதாரர் ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன அதற்கு ஆட்சேபனை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், மனு தொடர்பான காரணிகளை முன்வைக்க எல்லே குணவன்சே தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.