இந்த வார இறுதியில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையம் (CPSTL) ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு இருப்புக்களை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலதிக நேரச் செலவுகளைக் குறைப்பதற்காக கடந்த 4 மாதங்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் CPC மற்றும் CPSTL இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய விலை திருத்தத்தின் போது விலை குறைப்பு எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒடர்களை வழங்காமையால் தற்போது பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.