உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தொழிற்சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரி, பன்னிபிட்டிய தர்மபால கல்லூரி உள்ளிட்ட பல மதிப்பீட்டு நிலையங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டுப் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய முற்பணத் தொகையான 15,000 ரூபாவை வழங்காமையே இதற்கு முக்கியக் காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
முன்னைய கடமைகளின் எஞ்சிய கொடுப்பனவுகள் இன்னும் முழுமையாக செலுத்தப்படவில்லை என தெரிவித்த சங்கம், ஆசிரியர்களுக்கு 2.5 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த வேண்டும் எனவும் நினைவு கூர்ந்துள்ளது.
எவ்வாறாயினும்இ இது தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தரவிடம் வினவிய போது, மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய முற்பணத்தை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இன்றுடன் (26) நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.