ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை இன்று காலை சந்தித்தார்.
தலைநகர் டோக்கியோவில் உள்ள அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி விக்ரமசிங்க தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, புதிதாக தொடங்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பேச்சுவார்த்தைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை,ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடாவையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, ஜப்பான்-இலங்கை சங்கம் மற்றும் முன்னாள் பிரதமர் புகுடா இணைந்து டோக்கியோவில் நடத்திய காலை உணவு சந்திப்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.