வெலிக்கடை காவல்துறையினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த 42 வயதான பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி), இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த பெண்ணின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில், நாடாளுமன்றில் இன்று வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றன.
பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பில் வசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய நிலையில், திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக அண்மையில் வெலிக்கடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டார்.
எனினும், கைது செய்யப்பட்ட தினம் மாலையில், திடீர் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்தநிலையில், காவல்துறையினால் தமது மனைவி தாக்குதலுக்கு இலக்கான நிலையிலேயே உயிரிழந்ததாக குறித்த பெண்ணின் கணவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண்ணின் சடலம் மீள தோண்டியெடுக்கப்பட்டு உரிய வகையில் சுயாதீனமாக பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரும், குறித்த மரணம் தொடர்பான சுயாதீன விசாரணையை கோரியிருந்தனர்.
இதற்கு பதில் வழங்கிய பிரதமர் தினேஸ் குணவர்தன, குறித்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பின்றி உரிய விசாரணைகள் நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.