முதலாவது சவூதி அரேபிய விண்வெளியாளரை ஏற்றிச் சென்ற தனியார் விண்கலமொன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) புறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரய்யனா பர்னாவி (Rayyanah Barnawi), நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது சகாவான சவூதி அரேபியாவின் விமானப் படை விமானி அலி அல்-கர்னி உடன் இந்த பயணத்தில் இணைந்தார்.
இந்த ஜோடி விண்வெளிக்கு பயணம் செய்த முதல் சவூதி விண்வெளி வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.
அவர்கள் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபோல்கன் 9 என்ற விண்கலத்தில் தெற்கு அமெரிக்காவின் கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மாலை 5:37 க்கு புறப்பட்டனர்.
இந்த குழுவில் முன்னாள் நாசா விண்வெளியாளர் பெக்கி விட்சன் மற்றும் விமானியாக பணியாற்றும் டென்னசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோன் ஷோஃப்னர் ஆகியோரும் உள்ளனர்.
நால்வரும் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் ஒரு வாரத்தை செலவிட்ட பின்னர் அவர் தெற்கு அமெரிக்க மாநிலமான புளோரிடாவின் கடற்கரையில் தரையிரங்கவுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.