டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 43 சிறுவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
2 நாட்களுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல், வாந்தி மற்றும் உடல் சோர்வு இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடி தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
6 மாவட்டங்களிலுள்ள 57 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதி அபாய நிலையில் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 801 ஆக பதிவாகியுள்ளது.
அவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.