களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்துள்ள அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் அவரது கைப்பேசி மாயமாகியுள்ளதுடன், அதனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி உயிரிழந்ததையடுத்து பிரதான சந்தேகநபர், மற்றைய காதல் ஜோடியுடன், சடலத்தின் அருகில் சென்று மாணவியின் தொலைபேசியை ரயில் பாதைக்கு குறுக்கே ஏரிக்கரையை நோக்கி வீசியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல உண்மைகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சிறுமி ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை நடத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தன்னுடன் இருந்த போது அவருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், எவ்வாறு நான் வீட்டுக்கு செல்வேன் என கூறி அவர் பாய்ந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.