தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனு இன்று (08) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தார்.
பொருளாதார நெருக்கடி தொடர்பான காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மனிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் இதுவரை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.