பதுளையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பேரணியானது ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மே தினத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த பேரணி இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பேரணி என்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டிருந்ததுடன் இருவருக்குமான இடைவெளி அதிகரிப்பதை அவதானிக்கமுடிகின்றது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்சியின் தலைவர் சஜித் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்த நிலையில் கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகரித்து செல்கின்றது.
இந்நிலையில் பதுளையில் மே தின பேரணி ஐக்கிய மக்கள் சக்கியின் பேரணி அல்ல என்றும் அது தமது கட்சியின் பேரணி என்றும் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2019 ஆண்டு 52 நாட்கள் ஆட்சி கவிழ்ப்பின் போது வடிவேல் சுரேஷ் நல்லாட்சியில் இருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றிருந்ததுடன் மீண்டும் மஹிந்த விடமிருந்து விலகி ரணிலுடன் இணைந்திருந்ததுடன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.