கடந்த 2ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரால் பிரான்சில் இருந்து வந்த பயணி ஒருவரின் பயணப் பையில் இருந்து ரிவோல்வர் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பயணியாவார்.
அவர் 02 ஆம் திகதி 06.30 மாலை 06.30 மணியளவில் பிரான்சின் பாரிஸில் இருந்து Oman Airline W.Y.-373 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் பையை சோதனை செய்தபோது அதில் கைத்துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் இருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று குறித்த இடத்திற்கு வந்து ஆயுதங்கள் அடங்கிய பயணப் பொதியுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆயுதங்களை பரிசோதித்த போது அவை பிளாஸ்டிக்கினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதுடன், பின்னர்,பயணி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு ஆயுதங்களும் மேலதிக விசாரணை மற்றும் அறிக்கைக்காக கொழும்பு பொலிஸ் களப் படைத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.