கொழும்பு துறைமுகத்தின் 06 ஆம் இலக்க நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் தளத்தின் பாதுகாவலரால், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர், சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்திப் பகுதியில் இரும்பை திருட வந்த நிலையில் அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முற்பட்ட போது பதற்றமான சூழல் ஏற்பட்டது.
விசாரணைகளின்படி, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை குறித்த குழுவினர் பறிக்க முற்பட்ட போதே, மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
அத்துடன் இரும்பை திருடுவதற்காக அங்குச் சென்றவர்கள் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.
அதேநேரம் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.