தங்காலை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய தாயொருவர் தனது ஒரு நாள் வயதான சிசுவை வேறொரு தம்பதியினருக்கு விற்பனை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
எனினும் குழந்தையை மீண்டும் தன்னிடம் கொடுக்குமாறு குறித்த தம்பதியிடம் சிசுவின் தாய் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
குறித்த தம்பதிக்கு எதிராக சிசுவின் தாய் பொலிஸில் முறைப்பாடு அளித்ததற்கமைய, அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கர்ப்பமாகி ஒரு மாதத்துக்கு பின்னர் கணவன் குறித்த பெண்ணை விட்டு சென்றதாகவும், அதனால் குழந்தையை வளர்க்க முடியாது என குடும்ப சுகாதார அதிகாரியிடம் அறிவித்து அவர் மேற்படி தம்பதியிடம் சிசுவை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கருவுக்கு 6 மாதங்களானதில் இருந்து குறித்த தம்பதி செலவுகளை கையாண்டுள்ளதுடன், பிரசவத்திற்காக தனியார் வைத்தியசாலையொன்றிலும் சிசுவின் தாயை அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, குறித்த சிசுவை விற்பனை செய்த தாய் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.
#Lankadeepa