அக்குரணை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது, தாக்குதல் நடத்தப்படக்கூடும் என, பாதுகாப்பு அமைச்சின் 118 என்ற துரித அழைப்பு இலக்கத்துக்கு, போலியான தகவலை வழங்கிய நபர், எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை, ஹரிஸ்பத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கொழும்பு அழைத்து வரப்பட்டார்.
பின்னர், கொழும்பு பிரதான நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தவிட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முன்னதாக சந்தேகநபர், இரண்டு தடவைகள் இதுபோன்று அழைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் முறை, அழைப்பை ஏற்படுத்திய போது, போலியான தொலைபேசி இலக்கத்தையும், முகவரியையும் வழங்கிய அவர், இரண்டாம் முறையும் அழைப்பை ஏற்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து முன்னெடுத்த விசாரணைகளில், அவர் மௌலவி ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் ஏற்படுத்திய தொலைபேசி அழைப்பையடுத்து, அக்குரணை பகுதியில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்க கடந்த சில தினங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தால், நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.