ரமழான் தினத்திலும் அதற்கு முந்தைய நாட்களிலும் மத வழிபாடுகள் நடைபெறும் பள்ளிவாசல்களை அடையாளம் கண்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கிடைத்த தகவல் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ரமழானில் அடையாளம் காணப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, நடமாடும் வாகன ரோந்து, கால்நடை ரோந்து, இரவுநேர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, குற்றவாளிகள் இருந்தால், அவர்களை அடையாளம் காண, வீதி சோதனை சாவடிகளைப் பயன்படுத்தவும், சோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“பாணந்துறை பிரதேசத்தில் உள்ள தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் பொய்யானதாகும். ஆனால் அக்குறணை சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அக்குறணை நகரில் வெடிப்புச் சம்பவம் நடப்பதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கிடைத்திருந்தது. இந்த தகவல் பொய்யா அல்லது உண்மையா என்பதை உறுதிப்படுத்தும் வரையில் அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்தப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அந்தப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பள்ளிவாசல்களின் பாதிரியார்களுடன் கலந்துரையாடி, தேவையான பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்தார்.
ஆனால் அந்த தகவல் பொய்யான தகவல் என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளோம். பொய்யான தகவலை வழங்கிய நபரை கண்டறிய அது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சார் குறிப்பிட்டார்.