ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (UNFAO) அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் நாளை (22) விவசாய அமைச்சுக்கு வழங்கவுள்ளன.
அதிக விளைச்சலை பெற புதிய செய்கை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாராசூட் நெல் செய்கை முறையை ஊக்குவிக்க நெல் விவசாயிகளுக்கு உயர்தர விதைகளை வழங்க தேவையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஹம்பாந்தோட்டை – படாத்த விவசாய பூங்காவில் இடம்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் உள்ளிட்ட 07 மாவட்டங்களில் அரை ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் 71,000 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதேவேளை, உயர்தர விதை நெல் பதப்படுத்தும் புதிய தொழிநுட்ப முறைகள் மற்றும் தேவையான உபகரணங்களும் நாட்டில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.