அஹுங்கல்ல – மித்தரமுல்ல பிரதேசத்தில் சமீபத்தில நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினத்தில் கரந்தெனிய இராணுவ ஆயுதப் புலனாய்வுப் படை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த 36 இராணுவத்தினரின் T56 துப்பாக்கிகள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் விசாரணைகளுக்கு உதவிவரும் மோப்ப நாய்கள் குறித்த முகாமிற்குள் பிரவேசித்தமை தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கிகள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும், சந்தேகநபர்கள் கொலை செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு அருகில் விடப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பின்னரே மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த நேரத்தில், மோப்ப நாய் இரண்டு முறை முகாமுக்குள் சென்றது, அதன்படி விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டன.
இதற்கிடையில், துப்பாக்கிகள் பொலிஸ் பரிசோதகரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 வயதுடைய மீன்பிடி படகு காவலாளி உயிரிழந்தார்.
அவர் தனது சகோதரியின் இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
காயமடைந்த இரண்டு குழந்தைகளும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.