குருநாகல், தோரயாய, அட்டமுனே பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
நான்கு பிள்ளைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் சம்பத் ஞானரதன தெரிவித்துள்ளார்.
துசங்கி லன்சகார என்ற முப்பது வயதுடைய குறித்த பெண் 1.3 முதல் 1.1 கிலோ வரை எடையுள்ள மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
பிள்ளைகளின் தந்தையான புத்திக ஹேரத் மல்லவப்பிட்டிய பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.
தாம் முதலில் கர்ப்பமாக இருப்பதாக அறிந்து கொண்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளில் 4 கருக்கள் இருப்பதை கண்டறிந்ததாகவும், 8 மாதங்கள் நிறைந்த பின்னர் சிசேரியன் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வைத்தியர் பரிந்துரைத்ததாகவும் தாய் மேலும் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் போதாது என்பதால், குழந்தைகளுக்கான பால்மா வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் உதவ முன்வந்தால் தாம் அதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.