அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் சுமார் 30 மணி நேரம் தாமதமாக இன்று (17) காலை இலங்கை வந்தடைந்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்திற்குச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL 605 என்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 605 இன்று காலை 07.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் 5 சிறுவர்கள், 17 பணியாளர்கள் உட்பட 218 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் கடந்த 15 ஆம் திகதி இரவு 10.25 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் வருகை தாமதமானது.
பின்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 6 பொறியியலாளர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் இரவு அவுஸ்திரேலியா சென்று இந்த விமானத்தை சீர்செய்து உரிய திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.