இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான புதிய உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ரஷ்யக் கொடியுடன் கூடிய எந்தவொரு விமானத்தையும் தடுத்து வைக்கப் போவதில்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தரையிறக்கப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் பதிவாகி, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
விமான சேவைகள் குறித்த இணையத்தளமான சிம்பல் ஃப்ளையிங் என்ற இணையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பின்னர் விடுவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் தற்போது அந்த விமான சேவை மீண்டும் இலங்கைக்கான தமது பணியை முன்னெடுக்கிறது.
தற்போது இலங்கை வரும் சுற்றுலா பயணிகளில் அதிகமானோர் ரஷ்ய நாட்டு பிரஜைகளாக உள்ளமையினால் ரஷ்யா, இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தையாக உள்ளது.
இந்தநிலையில் உணவு மற்றும் பசளைக்கான உத்தரவாதம் அளிக்கும் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கான நடவடிக்கையில் இரு நாட்டு அரசாங்கங்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகவே இலங்கை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தமது உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.