ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராட் பகுதியில், பூங்காக்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களில், பெண்கள் மற்றும் குடும்பங்கள் உணவருந்துவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற இடங்களில் பாலினம் கலப்பது குறித்து மத அறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹெராட்டில் உள்ள நல்லொழுக்க பணியகத்தின் தலைவர் அஜிசுர் ரஹ்மான் அல் முஹாஜிர் தெரிவித்துள்ளார்.
”இது ஒரு பூங்கா போல இருந்தது, ஆனால் அவர்கள் அதை உணவகம் என்று பெயரிட்டனர். ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருந்தனர். இப்போது சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், எங்கள் குழுவினர் ஆண்கள் மற்றும் பெண்கள் செல்லும் அனைத்து பூங்காக்களையும் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.
அனைத்து உணவகங்களும் குடும்பங்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்படவில்லை. பூங்காக்கள் கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும் என்று அவர் கூறினார்.
பாலினம் கலப்பதாலும், பெண்கள் ஹிஜாப் அல்லது இஸ்லாமிய தலைக்கவசத்தை சரியாக அணியாததாலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில் இந்த புதிய விதியைப் பின்பற்றாத இடங்கள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருத்தமற்ற உள்ளடக்கம் காரணமாக சில விளையாட்டு தளங்களும் சிறுவர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
2021 ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல கட்டுப்பாடுகளில் விதித்துவருகின்ற நிலையில், அண்மைய கட்டுப்பாடாக இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.