வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யாமல் மற்றும் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பெண்கள் ஏப்ரல் முதலாம் திகதி முதல் தூதரகப் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக வெளிநாட்டுத் தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பான இல்லங்கள் நிறுவப்பட்டு, தூதரகங்களுக்கு வரும் பெண்களுக்குத் தேவையான நலன்புரி வசதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகளை வழங்குகின்றன. அவர்கள் வெளிநாட்டில் பணிபுரியும்போது பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு குறித்த பாதுகாப்பு இல்லங்கள் உதவுகின்றன.
சட்டப்பூர்வ வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்காக மாத்திரமே இந்த தங்குமிடங்கள் நிறுவப்பட்டுள்ளன, ஆனால் தற்போதுவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பணியகத்தில் பதிவுசெய்யாமல் வெளிநாடு சென்ற பெண்களுக்கு தேவையான அனைத்து நலன்புரி வசதிகளையும் வழங்கியுள்ளது.
நாட்டில் சமீபத்திய நாட்களில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பொலிஸாரின் உதவியைப் பெற வேண்டிய நிகழ்வுகள் பல ஊடகங்களால் வெளிவந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை ஊக்குவிப்பதற்காகவும், பல்வேறு தரகர்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் தலையீட்டின் மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்கள் செல்வதைக் கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எட்டப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.