தௌஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிமிடம் ஆயுத பயிற்சிகளை பெற்று ஏப்ரல் 21 தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் நேற்றைய தினம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கண்டி பகுதியை சேர்ந்த ஏ.எஸ் அப்துல்லா என்பவரையே 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு அதற்காக உதவி ஒத்தாசைகளை வழங்கியமை தொடர்பில் கடந்த 21ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சந்தேகநபர், மொஹமட் சஹ்ரானிடம் ஹம்பாந்தொட்டை பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் ஆயுத பயிற்சிகளை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.