இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபல இசைக்கலைஞர் பீத்தோவனின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது
இசை உலகின் ஜாம்பவான் லுட்விக் வன் பீத்தோவனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக் குழு நேற்று (22) உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, உலகப்புகழ் பெற்ற இந்த இசைக்கலைஞரின் மரணத்திற்கு இதுவரை காரணமாகக் கூறப்பட்டுவந்த ஈயம் அடங்கிய விஷ ரசாயனம் உட்கொண்டமை என்ற விடயம் இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் பொய்யாக்கப்பட்டுள்ளது.
பீத்தோவனின் தலைமுடியின் ஐந்து மாதிரிகளின் மரபணு மூலம் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, இரண்டு நூற்றாண்டுகளாக அவரது மரணத்துடன் தொடர்புடைய ஒரு சித்தாந்தம் உடைந்துவிட்டது.
அதன்படி, பீத்தோவனின் மரணத்திற்குக் காரணம், அவருக்கு மரபணு கல்லீரல் நோய் இருந்ததாகவும், ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று காரணமாக அவரது மரணம் ஏற்பட்டதாகவும் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பீத்தோவன் 1827 இல் வியன்னாவில் தனது 56 வயதில் மரணித்தார். மேலும் அவரது மரணத்திற்கு காரணம் அதிக மது அருந்துதல் மற்றும் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று காரணமாக கல்லீரல் நோய் மோசமடைந்தமை என்று இந்த ஆய்வை வழிநடத்திய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மானுடவியலாளர் டிரிஸ்டன் பெக் Current Biology என்ற சஞ்சிகைக்கு தெரிவித்தார்.
இருப்பினும், இந்த ஆய்வுக்கு முன், பீத்தோவனின் கல்லீரல் நோய்க்கு மது பழக்கம் தான் காரணம் என்று நம்பப்பட்டது, ஆனால் பீத்தோவனின் மரபணுக்களில் சேர்க்கப்பட்ட ஹெபடைடிஸ் பி வைரஸ் கல்லீரல் செயலிழப்பை துரிதப்படுத்தியது என்று பெக் கூறுகிறார்.
இறக்கும் வரை உலகிற்கு தலைசிறந்த படைப்புகளை படைத்து வந்த பீத்தோவன், தனது 29 ஆவது வயதில் செவித்திறன் இழப்பை அனுபவிக்க ஆரம்பித்தார். மேலும் 44 வயதிற்குள் முற்றிலும் செவித்திறன் குறைபாடு அடைந்தார்.
இருப்பினும், செவித்திறன் இழப்புக்கான ஒரு காரணத்தை மரபணு ஆய்வில் கண்டறிய முடியவில்லை என்று டிரிஸ்டன் பெக் கூறுகிறார்.
மேற்கத்திய நாகரிக வரலாற்றில் தூணாக உருவான இந்த சிறந்த இசைக்கலைஞர், பல ஓபராக்கள் மற்றும் சிம்பொனிகளை உருவாக்கியுள்ளார்.
அவற்றில், சிம்பொனி எண். 5, எண். 6, எண். 9, மூன்லைட் சொனாட்டா மற்றும் ஃபர் எலிஸ் உள்ளிட்ட அவரது படைப்புகள் உலகில் அழியாத படைப்புகளாக திகழ்கின்றன.