6.5 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான தங்கத்தை குடலுக்குள் வைத்து கடத்த முற்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் கர்நாடகா – கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கையரிடம் இருந்து 1.2 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
33 வயதுடைய சந்தேகநபர் பஹ்ரைனில் இருந்து கல்ஃப் ஏர் விமான சேவையில் பெங்களூருக்கு சென்றுள்ளார்.
அவரின் தகவல்களில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவரை அழைத்து சென்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த நபர் தமது குடலுக்குள் தங்கத்தை கடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.
அவர் நான்கு வில்லைகளில் தங்கத்தை அடைத்து குடலுக்குள் வைத்து பெங்களூருக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்தநிலையில், பெங்களூர் புலனாய்வு அதிகாரிகளால் தங்கம் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் இதற்கு முன்னரும் தங்கத்தை கடத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.