பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.
பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை பெற்றுக்கொடுக்க அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற தொழில் தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களது பிள்ளைகளை தொழில் கல்வியூடாக தகுதியுடையவர்களாக மாற்றுவதற்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழில் தகுதியுடையவர்களாக பிள்ளைகளை மாற்ற வேண்டுமாயின் முதலில் பெற்றோரிடத்தில் மாற்றம் வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.