நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரிசி விலையில் கணிசமான வீழ்ச்சியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில், நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை திருத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியை திங்கட்கிழமை கோரினார்.
இது தொடர்பில் நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இந்த நடவடிக்கையானது எதிர்வரும் காலங்களில் அரிசியின் சந்தை விலைகளில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.