ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதி மன்றம் இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிர பரணவிதான மற்றும் சாமிக்க ஹர்ஷனி சில்வா ஆகியோரை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கி அவர்களுக்குப் பதிலாக மேலும் இருவரை நியமிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த இரண்டு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது, கட்சியின் யாப்பிற்கு முரணாக கட்சியிலிருந்து நீக்கி வேறு இருவரை நியமிக்கும் யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேற்கொண்டுள்ளதாக குறித்த இருவரும் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுத்தாரர்களின் கோரிக்கையை விசாரணை செய்த மாவட்ட நீதிமன்றம் கட்சியின் தலைவர் மற்றும் பொது செயலாளருக்கு தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.