பாகிஸ்தான் வங்குரோந்தடைந்த நிலையிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பணம் திரட்டுவதற்காக, பாகிஸ்தான் வோஷிங்டனில் உள்ள அதன் தூதரகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சொத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த தகவலை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் தற்போது மீதமுள்ள அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்டு அடுத்த மூன்று வாரங்களுக்கான இறக்குமதிச் செலவுகளை மட்டுமே மேற்கொள்ளமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச நாணய நிதியக் குழுஇ, பேச்சுவார்த்தை நடத்த வந்தும் கூட, இறுதி ஒப்பந்தத்தை எட்டாமல் வெளியேறியமையானது, பாகிஸ்தானில் ஒரு அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் நிதி அமைச்சர் இஷாக் டார் ஆகியோர், சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து முன்நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டாலும், ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதை தடுக்கும் முகமாகவே பாகிஸ்தானிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் சந்திப்பை நடத்தியது.
10 நாட்கள் இந்த சந்திப்பு தொடர்ந்த போதும் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்படவில்லை.
மாறாக தொடர்ந்தும் மெய்நிகர் கலந்துரையாடல்களை பாகிஸ்தானிய தரப்புடன் மேற்கொள்ளப்போவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் பணக்காரர்களிடம் இருந்து வரியை அறவிடவேண்டும் எனவும் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் கோரியிருந்த சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தான் ஒரு நாடாக செயற்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.