கடந்த 14ம் திகதி இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பயணமாகி உலகத் தமிழர் பேரவையினுடைய தலைவர் பழ நெடுமாறனையும், கவிஞர் காசியானந்தாவின் அலுவலகத்தில் சந்தித்து இரண்டு மணித்தியாலங்கள் பேசியதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அங்கு சென்றவேளை இந்திய தொலைக்காட்சி ஒன்றில் நான் ஒருமணிநேர விவாதத்தில் கலந்துகொண்டேன். அதிலே தெரிவிக்கப்பட்ட முக்கிய கருத்துக்கள், தேசியத் தலைவர் பிரபாகரன் என காட்டப்பட்ட உடல் அவருடையது இல்லை என 2009 மே 20ல் இருந்து நான் மறுத்து வருகிறேன். டி.என்.ஏ பரிசோதனையைச் செய்யுங்கள் என சவால் விட்டு வருகிறேன்.
இதுவரை மரணச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மதிவதனியின் சகோதரி 10 வருடத்திற்கு முன்னர், அவரது தாயார் இறந்த போது அவர் கூறிய செய்தி எல்லோரும் நினைப்பது போலே தமது குடும்பத்தில் முழுக்க முடிந்துவிடவில்லை. மீதி இருக்கிறது. நேரில் சந்திக்தும்போது கூறுகிறேன் என்று.
அதிலிருந்து அவர்களில் முழுப்பேரும் கொல்லப்படவில்லை. உயிருடன் ஒருவர், இருவர் அல்லது மூவர் மீதமாக உயிருடன் இருக்கலாம் என நான் தெரிந்துகொண்டேன்.
அதற்கு மேலே பழ நெடுமாறனை உலகத் தமிழர்களின் தலைவராக நாங்கள் பரிபூரணமாக நம்புகின்றோம். இதிலே யார் யார் எதையாவது சொல்லட்டும். அவர் தமிழர் தேசிய முன்னணியின் தலைவராக இருக்கிறார். அது பதிவு செய்யப்பட்ட கட்சி, ஆனால் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
விரிவான உலகத் தமிழர்களுடைய விடுதலையை நோக்கிய செயற்றிட்டங்களிலே தலைவர் பழ நெடுமாறனும் கவிஞர் காசியானந்தனும் செயற்படுவார்கள். அவர்களுடன் இணைந்து நாங்களும் செயற்படுவோம் – என்றார்.