பிரபல வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுள் காப்புறுதி மற்றும் பல பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒனேஷ் சுபசிங்கவின் பிரேசில் பிரஜையான மனைவி மற்றும் அவரது தோழி ஆகியோர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒனேஷ் சுபசிங்கவின் மரணத்துக்கு பின்னர் பிரேசிலுக்கு தப்பிச் சென்ற அவரது மனைவி, இந்தச் சொத்தை உடைமையாக்க பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது மனைவி மற்றும் தோழி ஒனேஷின் கடன் அட்டைகள், கைத்தொலைபேசிகள், மில்லியன் கணக்கான மதிப்புள்ள கைக்கடிகாரம் மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசேட பொலிஸ் குழுவொன்றும் ஒனேஷ் சுபசிங்க கொலைச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனைக் கொல்லும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த உதவியாளரை அவரது மனைவி இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதன்படி, இலங்கைக்கு வந்த பிரேஸில் நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண், ஒனேஷும் அவரது மனைவியும் நான்கு வயது மகளும் தங்கியிருந்த கொழும்பு வோர்ட் பிளேஸில் உள்ள உயர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார்.
இந்த இரண்டு பிரேஸில் பெண்களும் அங்கிருந்து ஒனேஷ் சுபசிங்கவை கொல்ல திட்டம் தீட்டியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.