இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இனம், மதம் பேதமின்றி ஒன்றிணைவதே சிறந்த வழி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாம் வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்.
அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறானதொரு பாரதூரமான நிலையை நாம் எதிர்கொண்டதில்லை.
நமக்கு ஏன் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது? இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
நாம் உண்மையைப் பேசுவோம்.
இந்த நிலைக்கு நாம் அனைவரும் குறைவாகவோ அதிகமாகவோ பொறுப்புக் கூற வேண்டும்.
நாம் எவரும் விரல் நீட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல முடியாது.
நாம் ஆரம்பத்திலிருந்தே தவறு செய்தோம்.
அந்த தவறை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஆனால் நூறு சதவீதம் சரி செய்ய முடியவில்லை.
நம்மில் பெரும்பாலானோர் வாக்களித்தது நாட்டுக்காக அல்ல.
எங்களுக்கு தொழிலைப் பெற்றுக்கொள்ளவும், பிள்ளையைப் பாடசாலையில் சேர்ப்பதற்கும், விலைமனுக் கோரலுக்கு அனுமதி பெறவும் நாம் வாக்களித்தோம்.
தனிப்பட்ட ஆதாயத்திற்காகவே நாம் தேர்தல் வேட்பாளர்களுக்காக பணியாற்றினோம்.
நம்மில் பெரும்பாலானோர் தேர்தலில் போட்டியிட்டது கூட நாட்டுக்காக அல்ல. தங்களுக்காக.
அதிகாரத்தை பெறவும் சலுகைகளை அனுபவிக்கவும் மேலும் சம்பாதித்துக்கொள்ளவும் தேர்தலில் போட்டியிட்டனர்.
நாம் வாக்குறுதிகளில் சிக்கிக்கொண்டோம்.
கோசங்களில் சிக்கினோம்.
இவை அனைத்தினதும் விளைவாக நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் கோசங்களில் தெரிவிக்கப்பட்டவற்றை உறுதிப்படுத்தவும் நாங்கள் மேலும் மேலும் கடன் வாங்கினோம்.
நாம் அதிகம் அதிகமாக முதலீட்டுக்காக அல்லாமல், நுகர்வுக்காகத்தான் கடன் வாங்கினோம்.
‘கடன் முதலீட்டிற்காக அன்றி நுகர்வுக்காக அல்ல’ என்று புத்தரின் போதனைகள் கூறுகின்றன.
பௌத்தத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு புத்தரை வணங்கி பௌத்த தர்மத்தை தாண்டிச் சென்றுவிட்டோம்.
உண்மையில், நாம் இப்போது அழிவு நிலையை நோக்கி சென்றுள்ளோம்.
இந்த காயத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்புபவர்களும் உள்ளனர்.
ஆனால் நான் அதனை விரும்பவில்லை.
ஒரு சத்திரசிகிச்சை செய்து இந்த காயத்தை சுகப்படுத்திக் கொள்வோம்.
இது கடினமானது. வேதனையானது.
ஆனால் அந்த சோகத்தையும் வேதனையையும் சிறிது காலம் அனுபவித்தால், காயத்தை முழுமையாக குணப்படுத்த முடியும்.
சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டும் குறுக்குவழிகளால் இந்த நெருக்கடியிலிருந்து எமக்கு மீள முடியாது.
இந்த நெருக்கடியை சமாளித்து உண்மையான பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை அடைய வேண்டுமானால், நாம் செல்ல வேண்டியது ஒரே ஒரு வழிதான்.
இந்தக் குழியிலிருந்து வெளியேறுவதற்கு எமக்கு ஒரே ஒரு ஏணி தான் உள்ளது.
அரசியல் நலன்களுக்காக இந்த ஏணியை ஒதுக்கித் தள்ளினால், நமக்கு ஒரு நாடு இருக்காது.
நமக்கு நாளை இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இந்த நெருக்கடியை வெற்றிகொள்ள வேண்டுமாயின், நாம் குறுகிய அரசியலில் இருந்து விலகிச் செல்ல வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான கடினமான பணிகளை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம்.
விரைவில் அவர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதால் மட்டும் எம்மால் திருப்தி அடைய முடியாது.
ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலும் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த அரசியல் முறைமை, நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம், அரச பொறிமுறை ஆகிய அனைத்து துறைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும்.
இந்த மாற்றம் நாட்டுக்கும் நமக்கும் நல்லதாக அமைய வேண்டும்.
புதிய முறைமையில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கருத்துக்களுக்கும் பிரதிநிதித்துவங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இந்த முறைமை மாற்றத்துக்கு அவசியமான பல்வேறு சட்ட ஏற்பாடுகளை நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் விசேடமான பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதற்கான அமைச்சரவை உபகுழுவை ஏற்கனவே நியமித்துள்ளளோம்.
அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதி என்பன தொடர்பில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்படும்.
அவற்றின் கருத்துக்களின்படி, அந்தப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.
காணிகளை மீளக் கையளித்தல், கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.
அதுபோன்றே ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாம் முயற்சிப்பது மேலோட்டமாக தெரிகின்ற நோய்க்கு வலி நிவாரணிகளை வழங்க அல்ல.
நோயின் மூலக்காரணியை நிவர்த்தி செய்யவே முயற்சிக்கிறோம்.
அது சிரமமானது. மிகவும் கடினமானது.
எனினும் நாம் செல்ல வேண்டிய ஒரே வழி அதுதான்.
நான் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து எனக்கு எடுக்க நேரிட்ட பல தீர்மானங்கள் பிரசித்தமான தீர்மானங்கள் அல்ல என்பதை நான் அறிவேன்.
ஆனால் அந்தத் தீர்மானங்களால், இன்று இந்த நாட்டின் எந்தக் குடிமகனும் எரிபொருள் வரிசைகளில் நீரின்றி இறக்கவில்லை.
சமையல் எரிவாயு இல்லாமல் பட்டினியில் இல்லை.
உரம் இல்லாமல் சாபமிடவில்லை.
எனவே, அராஜக அரசியல் சக்திகள் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும், இந்த நாட்டை நேசிக்கும் பெரும்பான்மையான மக்களுடன் இணைந்து இந்தப் புதிய சீர்திருத்தத் திட்டத்தை முன்னெடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மனதில் கொண்டு ஒற்றுமையுடன் திட்டமிட்டு முன்னேறினால் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறலாம்.
உலகில் வேறு எந்த நாட்டிடமும் கையேந்தாத அபிவிருத்தி அடைந்த நாடாக மாறலாம்.
உண்மையான சுதந்திரத்தையும் அடைய முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.