2021 செப்டம்பரில் அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு முன்னாள் இராஜாங்க சிறைச்சாலை அமைச்சர் லொஹான் ரத்வத்த மேற்கொண்ட சர்ச்சைக்குரிய பயணம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு சிறைச்சாலைகள் அமைச்சுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலைத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு இரவு வேளையில் நண்பர்கள் குழுவுடன் அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி சமூகம் மற்றும் சமய மத்திய நிலையம் (CSR) செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த நிலையில், தகவல் அறியும் ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் முதலில் தகவல் அறியும் உரிமைச் சட்டக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிடமுடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், விசாரணை ஆணையத்தின் அறிக்கை இரகசிய ஆவணமாக வரவில்லை என்பதை தகவல் அறியும் ஆணைக்குழு அறிந்த நிலையில், பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் விண்ணப்பதாரருக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன மற்றும் உறுப்பினர்களான சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, ஜகத் லியன ஆராச்சி, ஏ.எம்.நஹியா ஆகியோர் முன்னிலையில் இந்த விடயம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 39ஆவது சரத்தின் பிரகாரம் சிறைச்சாலை அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.