இந்நாட்டின் கடல் எல்லைக்குள் மூழ்கிய கப்பல்களைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான வேலைத்திட்டத்தை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தயாரித்துள்ளது.
தற்போது இலங்கை கடற்பரப்பில் இவ்வாறான 47 கப்பல்கள் உள்ளதாகவும், அவற்றை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (02) அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்றது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூழ்கிய கப்பல்களைப் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் கடலின் அடிப்பகுதியில் டைவ் செய்து புகைப்படம் எடுப்பவர்களும் உள்ளனர்.
இதன்படி, சுற்றுலா அமைச்சு, கடற்படை மற்றும் தனியார் பயண நிறுவனங்களை உள்ளடக்கி இது தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, கலைநயமிக்க மதிப்பற்ற கப்பல்களை மீட்டு பழைய பொருட்களாக விற்பனை செய்து அரசாங்கக் கணக்கில் பணத்தை செலுத்துவதற்கும் உரிய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
கடல்சார் சட்டத்தின்படி, ஒரு வருட காலத்திற்குள் விபத்துக்குள்ளான கப்பல்கள் தொடர்பான உரிமைகள் வழங்கப்படாவிட்டால், அந்தக் கப்பல்களின் உரிமையானது அந்தந்த கடல் மண்டலத்தின் அரசாங்கத்திடம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.