வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் பெண்களின் பயிற்சிக் காலத்தை நீடிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சிப் பிரிவின் 15 நாள் பயிற்சி காலம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் NVQ (தேசிய தொழில் தகைமை) மட்டம் 3 இல் அமுலுக்கு வரும் வகையில் 28 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோட்பாடு மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் மற்றும் NVQ மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு மூன்று நாட்கள் ஒதுக்கப்படும்.
இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பயிற்சி பெற்ற நபர்களுக்கும் 2023 ஜனவரி 31 அல்லது அதற்கு முன் பயிற்சி முடித்தவர்களுக்கும் புதிய விதிமுறை பொருந்தாது.
திறமையான மற்றும் பயிற்சி பெற்ற இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் பயிற்சித் திட்டங்களின் தரத்தை உயர்த்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.