லண்டனில் இரவுவிடுதிகளில் மதுபானம் அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் சிலர் பொது இடங்களிலேயே சிறுநீர் கழிப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மதுபானக்கூடங்கள், உணவகங்கள் திரையரங்குகள், தரைவீடுகள், அடுக்குமாடி வீடுகள் என ஒன்றைக்கூட விடாமல் அவற்றின் சுவரோரமாகச் சென்று சிலர் சிறுநீர் கழிப்பதையும் அதன் விளைவாக வீசும் துர்நாற்றத்தையும் சகித்துக்கொள்ள முடியாமல் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
எனவே, இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் புதிய, நூதன அணுகுமுறை ஒன்றை லண்டன் மாநகராட்சி கடைப்பிடித்து வருகிறது.
லண்டனின் மத்திய வட்டாரத்தில் உள்ள கட்டடங்களின் சுவர்களில் Anti Pee Paint என்ற பூச்சொன்று பூசப்பட்டுள்ளது.
இந்த பூச்சு பூசப்பட்ட சுவர்கள் மீது யாராவது சிறுநீர் கழித்தால், சுவர் மீது விட்டெறியப்பட்ட பந்து திருப்பி வருவது போல அவர்கள் கழிக்கும் சிறுநீர் அவர்கள் மீதே தெறிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என்றும் இதனால் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் லண்டன் மாநகர அதிகாரிகள் நம்புகின்றனர்.