முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடமையாற்றிய காலப்பகுதியில், நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடர்ந்து காணாமல் போன 700 பேர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள நான்கு நிறுவனங்கள் ஜனாதிபதி ரணிலுக்கு இரகசிய கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் கடிதம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அந்தக் கடிதம் பகிரங்கப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்தக் கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
1989 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்ட காலப்பகுதியில் கஜபா படைப்பிரிவின் இயக்கத்தின் கட்டளை அதிகாரியாக இருந்த இராணுவ அதிகாரியே இக்காலப்பகுதியில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் குறித்த மாவட்டத்தில் இளைஞர்கள் உட்பட எழுநூறுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நவம்பர் 3ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கஜபா படைப்பிரிவின் முதலாவது படையணியின் தளபதியாகவும் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் செயற்பட்டார்.
இதன் போது, மாத்தளை விஜய வித்தியாலயத்தில் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதை இந்தக் குழுவினர் வெளிப்படுத்தினர்.
இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள இந்த நான்கு குழுக்களின் தலைவர்களும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தகவல்களை தமக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக 60 நாட்களுக்குள் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கடிதத்தை வெளியிடுவோம் என்று கூறியுள்ள குழு, உரிய காலத்திற்குள் இலங்கை அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத நிலையில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளது.
#Lankasara