இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடாவின் பொருளாதாரத் தடைகளை, ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை, அவர்களின் தலைமைப் பாத்திரம் எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக நீதியை உறுதிப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983 முதல் 2019 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட ‘மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்’ சம்பந்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு முன்னாள் இராணுவத்தினருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்தநிலையில் சர்வதேச சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிரான சர்வதேச தண்டனை தவிர்ப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தமது நாடு, தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைசசர் மெலனி ஜோலி தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கைகளில் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடுத்த கோரிக்கைகள் நீண்டகாலமாக கவனிக்கப்படாமல் இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்
எனவே இலங்கையின் மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மேலும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை ஆராயுமாறு, சர்வதேச அரசாங்கங்களை மீண்டும் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.